தலைவாசலில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
தலைவாசலில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தலைவாசல்:
மகா மாரியம்மன்
சேலம் மாவட்டம் தலைவாசலில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 85 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கடந்த 25-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
தேரோட்டம்
நேற்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது கேரள செண்டை மேளம் அடிக்க பக்தர்கள் ஆடி பாடி ஊர்வலமாக வந்தனர். தேரோட்டத்தில் தலைவாசல் பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 85 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடந்ததால் கிராம மக்கள் உறவினர்களை அழைத்து தேரோட்டத்தை கொண்டாடினர். கோவிலுக்கு புதிய தேர் செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குக்கு, கிராம மக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.