வங்கி கணக்கிற்கு பணம் வராத பெண்கள் தாலுகா அலுவலகத்திற்கு படையெடுப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வங்கி கணக்கிற்கு பணம் வராத பெண்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள தாலுகா அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
கலைஞர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. மேலும் தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்களுக்கான உதவி மையம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று 2-வது நாளாக நடந்த முகாமில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். காலையில் கலெக்டர் அலுவலகத்தின் வெளியே பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமர வைக்கப்பட்டனர்.
இதில் உரிமை தொகை கிடைக்காதவர்களின் ஆதார் எண்களை வைத்து அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் மனு மீதான தற்போதைய நிலவரங்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில் தகுதியான நபர்கள் இ-சேவை மையத்தில் மறுபடியும் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
சரிபார்க்கும் பணி
பொதுமக்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக்கொள்ளலாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர். ஒரே நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வர் மிகவும் தாமதமாக செயல்பட்டது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, "வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 செலுத்தியதும் வங்கி அந்த பணத்தை பிடித்துக்கொள்கிறது. அதுபோன்ற வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பாமல் இருக்கிறார்கள். அதுபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் எண் இணைக்காதவர்களுக்கும் பணம் அனுப்பாமல் உள்ளது. இதுபோன்ற குறைகளை அறிந்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம்"என்றனர்.
பல்லடம்-அவினாசி
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டது. அப்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார். அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.இந்த முகாமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவினாசியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மறு விண்ணப்பம் விண்ணப்பிக்க வந்த பெண்கள் அவினாசி தாலுகா அலுவலகத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
குடிக்க தண்ணீர்,கழிவறை உள்ளிட்ட உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.