தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணி விரைவில் முடிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு


தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணி விரைவில் முடிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
x

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து ஊரக, உள்ளாட்சி, பேரூராட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கூடங்குளம் அணு சங்கமம் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வும், தமிழக சபாநாயகருமான அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார். கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட 360 கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் என்ற புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. வள்ளியூர், பணகுடி, திசையன்விளை நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்காக 271 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட இருக்கிறது.

வள்ளியூரில் 300 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.திசையன்விளையில் தாலுகா மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால் மற்ற இடங்களில் கடலரிப்பு பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இதற்காக களஆய்வு மேற்கொண்டு விரைவில் கடற்கரை பகுதிகள் முழுவதும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். இதன்மூலம் நிலத்தடி நீர் அதிகரித்து வறண்ட ராதாபுரம் தொகுதி வளம் மிகுந்த செழிப்பான பகுதியாக மாறும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு அணுமின் நிர்வாகம் சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கூறியும், அணுமின் நிலைய நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதற்கு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராதாபுரம் தொகுதி விவசாய மக்களின் உயிர் நாடியான பேச்சிப்பாறை தண்ணீரை ராதாபுரம் கால்வாயின் மூலம் 52 குளங்களுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், திட்ட இயக்குனர் சுரேஷ், யூனியன் தலைவர்கள் வள்ளியூர் சேவியர் செல்வராஜா, ராதாபுரம் சவுமியா, நகர பஞ்சாயத்து தலைவர்கள் வள்ளியூர் ராதா ராதாகிருஷ்ணன், பணகுடி தனலட்சுமி தமிழ்வாணன், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story