நாமக்கல்லில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு


நாமக்கல்லில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்:  நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
x

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம், சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் சரோஜா, சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் அனைத்து வகையான வரிகளையும் உயர்த்தி உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக, மின்கட்டண உயர்வு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரு வார காலத்துக்குள் மின்வெட்டு வந்தது.

முதியோர் உதவித்தொகை ரத்து

இதற்கு காரணம் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மத்திய அரசின் மீது பழியை போட்டுவிட்டு, நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை என்பதற்கு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் அரங்கேறிய கலவரமே சாட்சி. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

ஓ.பன்னீர்செல்வம் ரவுடிகளை அனுப்பி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து உள்ளனர். இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்.

மத்திய அரசிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி மானியம் வரவேண்டி உள்ளதாகவும், மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் அந்த மானியத்தை பெற தி.மு.க. அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இலவச வேட்டி- சேலை திட்டம்

தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தங்கமணி, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை நிறுத்த தி.மு.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு நிறுத்தினால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார். பின்னர் மின்கட்டணம், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி, கலாவதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ்.காளியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி, மாவட்ட கவுன்சிலர் ருத்ராதேவி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story