ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம்- அண்ணாமலை சவால்
வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம். ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம். தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிய விஷயம் மட்டுமல்லாமல், திமுக தனது சகாக்களை எப்படி பார்க்கிறது?, ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து அமைச்சராக ஒருவர் வந்தால் கே.என்.நேரு எப்படிப்பட்ட வார்த்தையால் அந்த அமைச்சரை பேசுகிறார்? என்பதை காட்டுகிறது.
இவர்கள் சமூக நீதியைப்பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள். நாளை காலை பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவை கொடுக்க உள்ளனர். அதை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு, மாநில டிஜிபிக்கு அதை அனுப்பலாம், தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யலாம். எ.வ.வேலு அவர்கள் அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார். கே.என்.நேரு பேசியதை அப்படியே போட்டிருக்கிறேன். அது உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்ட்டால் முதலமைச்சர், தமிழக மக்களிடம் பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்.