100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்
வேளாண் பணிகள் நடைபெறும் காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும்.
வேளாண் பணிகள் நடைபெறக்கூடிய காலங்களில் 100 நாள் வேலைக்கு அனுமதி வழங்கும்போது விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றது. விவசாயப் பணிகள் இல்லாத நாட்களில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும், 100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் வழங்குவதற்கு பதிலாக இயற்கை உரங்களை 50 சதவீதம் வழங்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேளாண்மை துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் அடித்து இயற்கை உரங்கள் பயன்பாட்டையும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பினையும் தெரியப்படுத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு புள்ளம்பாடி வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகளுக்கு மாற்று பயிர் செய்வதற்கான ஆலோசனையை வேளாண்மை துறை உடனடியாக வழங்கி, அந்தப்பகுதி விவசாயிகளின் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
நீர்மட்டத்தை காக்க வேண்டும்
விவசாயி செங்கமுத்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் யூரியா, காம்ப்ளக்ஸ் அதிக விலைக்கு விற்பதை தடை செய்ய வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தூர்வாரப்படும் ஏரியையும், மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஆழப்படுத்தும் ஏரிகளையும் அளந்து ஆக்கிரமிப்பை அகற்றி அதன் பிறகு ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்றார்.
விவசாயி செந்தில்குமார் பேசுகையில், முந்திரி விவசாயிகள் நிலை கேள்வி குறியாக உள்ளது. அரியலூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செட்டி ஏரியை அழப்படுத்தி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை காக்க வேண்டும். நம்முடைய மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து, நீர் நிலைகளில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
குடிநீர் இன்றி தவிப்பு
விவசாயி பாலசிங்கம் பேசுகையில், செந்துறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையம் 33 கிலோ வாட் என்ற அளவில் உள்ளது. தற்போது செந்துறை நகரமானது வளர்ச்சியடைந்த நிலையில் 110 கிலோ வாட் துணை மின் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் மட்டுமே தற்போது ஏற்படும் மின் சிரமங்கள் குறையும். செந்துறை ஒன்றியத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை.
சில பகுதிகளில் பெண்கள் குடிநீருக்காக 2, 3 கிலோமீட்டர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை போக்க வேண்டும். மாவட்டத்தில் காலாவதியான சுரங்கங்களை மூடி பசுமை வனமாக மாற்ற வேண்டும் என்றார். இதேபோல் விவசாயிகள் பலர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, கலெக்டரிடம் மனு அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.