11 வது வேளாண் கணக்கெடுப்பு பணியை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11-வது வேளாண் கணக்கெடுப்பு பணியை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
கள்ளக்குறிச்சி
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புள்ளியியல் துறையின் சார்பில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த வேளாண்மை கணக்கெடுப்பு பணி தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக 2021-2022-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 11-வது கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது. இதன் நோக்கம் புதிய வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் வகுப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் ஆகும். கணக்கெடுப்பின் மூலம் கைப்பற்றிய வகைகள், அவற்றின் எண்ணிக்கைகள் நிலப் பயன்பாடு, பயிரிடும் வகைகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடுபொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது. அனைத்து வருவாய் கிராமங்களிலும், நில ஆவணப்பதிவேடுகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில் விவரங்களை மறு அட்டவணைப்படுத்திடும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை ஆராய்ந்து கைப்பற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பு விவரங்களை வகுப்பு வாரியாக சேகரிக்கப்படவுள்ளது.
சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்
முதல் முறையாக கணினிமயமாக்கப்பட்ட நில ஆவண பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு, வேளாண் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்பொருள் செயலியை பயன்படுத்தி, கைப்பேசி மற்றும் கையடக்கக்கணினி, மடிக்கணினி மற்றும் கணினிகளின் வழியே கணக்கெடுப்புப்பணி நடைபெறவுள்ளது. மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வேளாண் கணக்கெடுப்பு பணியை தொடர்புடைய அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் லதா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகலட்சுமி மற்றும் தாசில்தார்கள், வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.