கைதான 5 பேரை வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 5 பேரை வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
உக்கடம்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 5 பேரை வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கார் வெடிப்பு
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2-வது நாளாக விசாரணை
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரோஸ் கான் உள்பட 5 பேரையும் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து உக்கடம் ஜி.எம்.நகர் பகுதிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று 2-வது நாளாக அன்பு நகர், புல்லுக்காடு ஆகிய பகுதிகளுக்கு 5 பேரையும் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் உமர் பாரூக்கை சொந்த ஊரான ஊட்டிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் 5 பேரின் வீடுகளில் ஏதேனும் சதி திட்டம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு வருகிற 29-ந் தேதி பெரோஸ் கான் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.