தலைமறைவாக இருந்த தாசில்தார் அதிரடி கைது


தலைமறைவாக இருந்த தாசில்தார் அதிரடி கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் நிலம் அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த தாசில்தாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

தேனி

182 ஏக்கர் அபகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் நிலம் அரசு அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்டு, பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் கடந்த ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து பெரியகுளம் சப்-கலெக்டராக இருந்த ரிஷப் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தாசில்தார் கைது

இந்த வழக்கில் அன்னப்பிரகாஷ், பிச்சைமணி, அழகர் உள்பட 6 பேர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கைது செய்யப்பட்டனர். துணை தாசில்தார் சஞ்சீவ் காந்தி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

வழக்கில் தொடர்புடைய தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்பட சிலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இதில் கிருஷ்ணகுமார் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு, தேனி மாவட்ட கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகுமார் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜர் ஆனார்.

அவரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் மாவட்ட தலைமை ஜுடிசியல் கோர்ட்டில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story