தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
x
தினத்தந்தி 15 March 2023 11:51 AM GMT (Updated: 15 March 2023 12:39 PM GMT)

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொன்னேரி

பொன்னேரி சார்பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பொன்னேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நாகை வட்டாச்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவடி

ஆவடி பத்திரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகைஸ்வரி மீது ஏராளமான புகார்கள் குவிந்ததால், இந்த சோதனை என கூறப்படுகிறது.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் வீட்டுவரி, தண்ணீர் வரி, கடை வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் ஒப்பந்த பணி உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் வாங்கபடுவதாக தொடர் புகார் வந்தது. கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அறை கதவுகளை மூடி சோதனை நடக்கிறது.

புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரைபட அனுமதி பெற்று தரும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 4 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அலுவலகத்தின் அறையை பூட்டிய அதிகாரிகள், உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை

திருப்பூர்

திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நீலகிரி

அதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூர் பத்திர பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தேனி

தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி வருவதாக எழுந்த புகாரையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story