மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில்விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை6 பேர் மீது வழக்கு
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்குள்ள அலுவலக கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு சோதனையை தொடர்ந்தனர். அதோடு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனையின்போது அந்த அலுவலகத்தில் ரூ.3 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. அந்த பணத்திற்கு அதிகாரிகளால் உரிய கணக்கு காட்ட முடியாததால் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
விடிய, விடிய
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பாலமணிகண்டன் என்பவர் சார்பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளதும் அவர் அவ்வப்போது பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் மொத்தமாக லஞ்சப்பணத்தை வசூல் செய்து அதனை அதிகாரிகளுக்கு கொடுத்து வந்துள்ளதும் தெரியவந்தது. போலீசாரின் சோதனையின்போது பாலமணிகண்டனும், அவருடன் வெளிநபர்கள் சிலரும் அந்த அலுவலகத்திற்குள் இருந்தனர்.
இதையடுத்து அவர்களிடமும் மற்றும் சார்பதிவாளர் சங்கீதா, அலுவலக பணியாளர்கள் ஆகியோரையும் அலுவலகத்திற்குள் அமர வைத்து அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை செய்தனர். அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பத்திரப்பதிவு செய்ய எத்தனை பேர் வந்துள்ளனர், எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி சோதனை செய்தனர். நள்ளிரவையும் தாண்டி நீடித்த இந்த சோதனையானது விடிய, விடிய நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 10 மணி நேரமாக தொடர்ந்து நேற்று காலை 7.30 மணிக்கு முடிவடைந்தது. சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.
6 பேர் மீது வழக்கு
இந்நிலையில் இந்த சோதனையை தொடர்ந்து சார்பதிவாளர் சங்கீதா, இடைத்தரகர் பாலமணிகண்டன், அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் மயிலம் பகுதியை சேர்ந்த சுரேஷ், விஜய்ஆனந்த், விநாயகம் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.