திருமண்டல 'லே' செயலாளர் உள்பட 11 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
நெல்லையில் மதபோதகரை தாக்கிய வழக்கில் திருமண்டல ‘லே’ செயலாளர் உள்பட 11 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லையில் மதபோதகரை தாக்கிய வழக்கில் திருமண்டல 'லே' செயலாளர் உள்பட 11 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இருதரப்பினர் பிரச்சினை
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பேராயராக பர்னபாஸ் இருந்து வருகிறார். இவர் தலைமையில் ஒரு பிரிவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணி நியமனம் உள்ளிட்ட காரணங்களால் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
தற்போது பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய தாளாளர் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் திருமண்டல அலுவலகத்தில் உள்ள சில அறைகளை பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் எதிர்தரப்பினர் அந்த அறைகளை திறக்க வேண்டும், அலுவலக பணிகளை முடக்க கூடாது என்று கூறி வந்தனர்.
மத போதகர் மீது தாக்குதல்
இந்த நிலையில் சம்பவத்தன்று இட்டேரி பகுதியை சேர்ந்த மத போதகரான காட்பிரே நோபுள் என்பவர் சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்திற்கு சென்று, அங்கு அறைகளை பூட்டி வைப்பதால் பணிகள் முடக்கப்படுவதாக கூறியும், அதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறினார். அப்போது அங்கிருந்த சிலர், காட்பிரே நோபிளை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து மத போதகர் காட்பிரே நோபுள் பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக ஞானதிரவியம் எம்.பி., திருமண்டல 'லே' செயலாளர் ஜெயசிங், பொருளாளர் ஏ.டி.ஜே.சி.மனோகர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் திருமண்ட 'லே' செயலாளர் ஜெயசிங், பொருளாளர் ஏ.டி.ஜே.சி.மனோகர் உள்பட 11 பேர் நெல்லை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதாடினார்கள். மனுவை விசாரித்த நீதிபதி சீனிவாசன், 11 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.