விமானத்தில் பயணித்த ஆடிட்டர் திடீர் சாவு
விமானத்தில் பயணித்த ஆடிட்டர் திடீர் சாவு
கோவை
கோவையில் இருந்து மும்பை செல்ல புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆடிட்டர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கோவை விமானநிலையம்
கோவை விமானநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.45 மணியளவில் மும்பைக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி அந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் புறப்பட்டது. அந்த விமானத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த ஆடிட்டரான லோகநாதன் (வயது 51) என்பவர், மும்பை சென்று அங்கிருந்து புனே செல்வதற்காக நேற்று காலை கோவை விமானநிலையம் வந்தார்.
பின்னர் அவர் மும்பை செல்லும் விமானத்தில் ஏறினார். காலை 6.45 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது லோகநாதனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார்.இதைப்பார்த்ததும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டனர்.
ஆடிட்டர் சாவு
சத்தம் கேட்டு பணிப்பெண்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று உடனே விமானத்தை நிறுத்தினர். பின்னர் இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளுக்கும், மருத்துவ குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மருத்துவ குழுவினர் லோகநாதனை மீட்டு உடனே விமானநிலைய ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மும்பை விமானம் சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை சென்றது. கோவையில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆடிட்டர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.