வங்கி நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஈரோட்டில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம்

வங்கி நகை மதிப்பீட்டாளர்கள்
கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின், மாநில அளவிலான கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரவணன், பொறுப்பாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நகை மதிப்பீட்டாளர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு நகை மதிப்பீட்டுக்கான கமிஷன் தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு உயர்த்தப்படவில்லை. அதன்படி ரூ.5 லட்சம் வரை நகைக்கடனுக்கு ரூ.200 கமிஷன் வழங்கப்படுகிறது. அதை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரைக்குமான கடனுக்கு ரூ.200-ம், ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடனுக்கு ரூ.500-ம், ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடனுக்கு ரூ.800-ம், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.1,000-ம் நிர்ணயிக்க வேண்டும்.
நகை மதிப்பீட்டு பணி தவிர இதர வங்கி பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கக்கூடாது. மற்ற வங்கி ஊழியர் போல் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அவர்களும் பணியாற்றுகின்றனர். அதற்குமேல் வாடிக்கையாளர்களை வங்கியில் காக்க வைத்து 8 மணி வரை நகை மதிப்பீடு செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாது. வங்கி நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் கனகராஜ், செயலாளர் செந்தில்குமார் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.