விசைப்படகு மீனவர்கள் 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


விசைப்படகு மீனவர்கள் 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x

விசைப்படகு மீனவர்கள் 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம்:

மீன் பிடிக்க செல்ல தடை

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினரால் கடந்த 20-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து கடல் பகுதியில் காற்று வீசுவதால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 8-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை வரிசையாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அனுமதி அளிக்க வேண்டும்

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், மீன் பிடிக்க செல்லாததால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பகுதியில் தற்போது காற்று குறைந்து இயல்பு நிலை உள்ளது. எனவே கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் பரிசீலனை செய்து மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும், என்றனர்.

மீன்கள் விலை உயர்வு

இதற்கிடையே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீன் வரத்து குறைந்த நிலையில், இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்ற நண்டு தற்போது ரூ.450-க்கும், கிலோ ரூ.250-க்கு விற்ற இறால் ரூ.350-க்கும், கிலோ ரூ.350-க்கு விற்ற பாறை மீன் ரூ.500-க்கும், ஒரு கிலோ ரூ.400-க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது ரூ.600-க்கும், கிலோ ரூ.400-க்கு விற்ற கொடுவா மீன் தற்போது ரூ.500-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற முரல் மீன் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள் எதிர்பார்த்த அளவில் மீன்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால் மீன் மார்க்கெட்டுகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

1 More update

Next Story