அழகுநிலைய ஊழியர் உடலை துண்டாக்கி 3 இடங்களில் வீசினோம்
அழகுநிலைய ஊழியர் உடலை துண்டாக்கி 3 இடங்களில் வீசினோம்
துடியலூர்
கள்ளக்காதலியை அடைய அழகுநிலைய ஊழியரை கொலை செய்து உடலை துண்டாக்கி 3 இடங்களில் வீசினோம் என்று கைதான எலெக்ட்ரீசியன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அழகுநிலைய ஊழியர் கொலை
கோவையை அடுத்த துடியலூர் அருகே சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டியில் வாலிபர் ஒருவரின் இடதுகை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஈரோடு மாவட்டம் சங்காரா பாளையத்தை ேசர்ந்தவர் பிரபு (வயது 39).
இவர் கோவை சரவணம்பட்டி ஜனதா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு உடலை 12 துண்டாக வெட்டி வீசியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் பிரபுவின் கள்ளக்காதலியும், அந்த அழகு நிலையத்தில் வேலை செய்து வந்த கவிதா (39), கணபதிமாநகரை சேர்ந்த அமுல் திவாகர் (34), அவருடைய உறவினர் காந்திபுரம் கார்த்திக் (28) ஆகியோரை கைது செய்தனர். இதில் அமுல்திவாகர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதுகுறித்த விவரம் வருமாறு:-
ஆபாச படத்தை காட்டி டார்ச்சர்
நான் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறேன். எனக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்தோம். கடந்த சில நாட்களாக கவிதா மிகவும் மனஉளைச்சலில் இருந்தார்.
அதுகுறித்து நான் கேட்டபோது, கவிதாவின் ஆபாச படங்களை பிரபு தனது செல்போனில் வைத்து இருப்பதுடன், அதை காட்டி செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும் கூறினார். அவரை தீர்த்து கட்டினால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றும் என்னிடம் கூறினார். இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நான் எனது உறவினரான கார்த்திக்கை சேர்த்துக்கொண்டேன்.
12 துண்டுகளாக வெட்டினோம்
ஏற்கனவே திட்டமிட்டபடி நான் பிரபுவுக்கு போன் செய்து, கவிதா குறித்து பேச வேண்டும் என்று அவரை வரவழைத்தேன். பின்னர் நானும், கார்த்திக்கும் சேர்ந்து பிரபுவை எனது வீட்டுக்கு அழைத்துச்சென்றோம். பின்னர் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் கத்தியை எடுத்து பிரபுவின் கழுத்தில் வேகமாக குத்தினோம். இதில் கீழே சரிந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் உடலை என்ன செய்யலாம் என்று யோசனை செய்தோம். நான் எலெக்ட்ரீசியன் என்பதால் இரும்பு கம்பிகளை வெட்டும் கட்டிங் மெஷின் என்னிடம் இருந்தது. உடனே அந்த மெஷின் மூலம் பிரபுவின் கை, கால், மார்பு பகுதி, தொடை என அவருடைய உடலை பையில் அடைப்பதற்கு வசதியாக 12 துண்டுகளாக வெட்டினோம்.
3 இடங்கள்
வெட்டப்பட்ட பாகத்தில் இருந்து ரத்தம் வடிவதை தவிர்க்க பிளாஸ்டிக் கவருக்குள் அவற்றை வைத்து 3 பைகளில் அடைத்து வைத்தோம். ஒரே இடத்தில் உடலை வீசினால் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் தனித்தனியாக அவற்றை 3 இடங்களில் தூக்கி நீர்நிலைகளில் வீச முடிவு செய்தோம்.
இதற்காக 2 பையில் தலை, கழுத்து, கை, கால் என 8 துண்டுகளை எடுத்து இருசக்கர வாகனத்தில் நானும், கார்த்திக்கும் சென்றோம். வழியில் வெள்ளக்கிணர் அருகே குப்பை தொட்டி இருந்தது. எனவே அங்கு பையில் இருந்த ஒரு கையை எடுத்து வீசிவிட்டு, மீதமுள்ள தலை உள்பட 7 துண்டுகளை துடியலூர் அருகே பாழடைந்த கிணற்றில் வீசினோம்.
தகவல் தெரிவித்தேன்
பின்னர் வீட்டுக்கு வந்து மீதமுள்ள தொடை பகுதி, முழங்கைப்பகுதி என 4 பாகத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு பீளமேடு பகுதியில் ஒரு சாக்கடை பள்ளத்தில் வீசிச்சென்றோம். பின்னர் இது குறித்து கவிதாவுக்கு செல்போனில் தொடர்பு, பிரபுவின் உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசியதால் போலீசார் கண்டுபிடிக்க முடியாது என்று தகவல் தெரிவித்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.