கோழிப்பண்ணையில் இருந்து படையெடுக்கும் ஈக்கள்


கோழிப்பண்ணையில் இருந்து படையெடுக்கும் ஈக்கள்
x

கோழிப்பண்ணையில் இருந்து படையெடுக்கும் ஈக்கள்

திருப்பூர்

போடிப்பட்டி,

மடத்துக்குளம் அருகே கோழிப் பண்ணையிலிருந்து கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் ஈக்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோழிக்கழிவுகள்

மடத்துக்குளத்தையடுத்த தெற்கு கண்ணாடிப்புத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கோழிப் பண்ணை செயல்பட்டு வருகிறது. அங்கு கோழிக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் குவித்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் அதிக அளவில் ஈக்கள் உற்பத்தியாகிறது. இந்த ஈக்கள் அருகிலுள்ள கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன.

இந்த பண்ணைக்கு அருகில் காட்டு சாளைகளில் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஈக்கள், தண்ணீர், உணவுப் பொருட்கள் எதையும் விட்டு வைக்காமல் மொய்க்கின்றன. மேலும் தண்ணீர், உணவுப் பொருட்களில் விழுந்து செத்து மிதக்கின்றன. இதனால் அருவெறுப்படையும் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. இதன் மூலம் பல்வேறு விதமான நோய்த் தொற்றுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

பால் உற்பத்தி பாதிப்பு

கால்நடைகளின் மீது கூட்டம் கூட்டமாக ஈக்கள் மொய்ப்பதால் அவை அமைதியில்லாத நிலையிலேயே உள்ளன. இதனால் கறவை மாடுகளில் பால் சுரப்பு குறைந்து பால் உற்பத்தி பாதிக்கிறது. மேலும் ஈக்கள் தொல்லையால் பால் கறப்பதற்குள் விவசாயிகள் படாத பாடு படும் நிலை உள்ளது. எல்லாவற்றுக்கு மேலாக விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் முகம் மற்றும் உடலில் ஈக்கள் மொய்க்கிறது. இதனால் இந்த பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு வருவதற்கு கூலித் தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் இந்த பிரச்சினையால் விவசாயப் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் ஈக்கள் தொல்லை அதிகரிக்கும்போது சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையில் தெரிவித்தால் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்தி ஈக்கள் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுப்பார்கள். அத்துடன் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு ஆட்களை அனுப்பி மருந்து தெளித்து ஈக்களை கட்டுப்படுத்துவார்கள்.

ஈக்கள் மீது புகார்

தற்போது ஈக்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை மேலாளரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர் 'ஈக்கள் தொல்லை செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். வேண்டுமானால் ஈக்கள் மீது புகார் கொடுங்கள். ஈக்களை கைது செய்யட்டும்'என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்.எனவே ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். போது சுகாதாரத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணை மீது நடவடிக்கை எடுக்கவும், ஈக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.



Next Story