மாவட்ட தலைவர் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல்


மாவட்ட தலைவர் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல்
x

திருச்சி மாவட்ட தலைவர் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூட கேளிக்கை நடன விடுதி தொடங்கப்பட உள்ளதை கண்டித்து நேற்று முன்தினம் பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் புத்தூர் நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட 9 பேரை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை கண்டித்தும், அவர்களை விடுவிக்க கோரியும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர்.

புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லக்குடி அருகே உள்ள சுங்க சாவடி முன்பு சாலை மறியல் நடைபெற்றது. புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய தலைவர் முத்தரசு தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் லோகிதாசன், மாவட்ட பொது செயலாளர் சபரி, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ், தர்மராஜ், பொருளாளர் கார்த்திக், திருஞானசம்பந்தம், மகளிர் அணி பிரேமலதா, சத்யா, தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

45 பேர் கைது

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 45 பேரை கைது செய்து கல்லக்குடியில் உள்ள சவேரியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

திருச்சி மாநகர்

இதேபோல் திருச்சி பாலக்கரை மெயின்ரோடு இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் பாலக்கரை மண்டல் சார்பில் மண்டல் தலைவர் மல்லி செல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை, காந்திமார்க்கெட், பொன்மலை, கருமண்டபம், பீமநகர், தென்னூர், உறையூர், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், உள்ளிட்ட 10 இடங்களில் மண்டல வாரியாக பா.ஜ.க. நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவை சேர்ந்த 59 பெண்கள் உள்பட 333 பேர் கைது செய்யப்பட்டனர்.

முசிறி-உப்பிலியபுரம்

இதேபோல் முசிறி கைகாட்டியில் முசிறி நகர் மண்டல் தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள் பட23 பேரை முசிறி போலீசார் கைது செய்தனர். இதேபோல் பா.ஜனதா சார்பில் எரகுடியில் மறியலில் ஈடுபட்டதாக 10 பேரும், உப்பிலியபுரத்தில் 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் திருவெறும்பூரில் தேசிய செயற்குழு உறுப்பினர் பார்வதி நடராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் துவாக்குடி பகுதியில் ஊடக பிரிவு மாநில செயலாளர் கோபிநாத் தலைமையிலும், குண்டூரில் மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா மனோகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மணப்பாறை

மணப்பாறை பஸ் நிலையம் முன்பு நகர தலைவர் வக்கீல் மோகன்தாஸ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர். இதே போல் புத்தாநத்தம், துவரங்குறிச்சி, கைகாட்டியில் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர். இதே போல் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story