காணாமல் போன வாலிபர் உடல் எலும்புக்கூடாக மீட்பு
உவரி அருகே காணாமல் போன வாலிபர் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள குட்டம் குஞ்சன்விளையை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் சின்னதுரை (வயது 23). இவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதியில் இருந்து காணவில்லை என்று உவரி போலீசில் அவரது தந்தை புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் குட்டம் கடற்கரை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள உடை மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக உவரி போலீசுக்கு மரம்வெட்டும் தொழிலாளிகள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். எலும்புக்கூடு அருகில் விஷப்பாட்டில், அவர் அணிந்திருந்த உடைகள் காலணி, பயன்படுத்திய செல்போன் ஆகியவை கிடந்தது. அதை பார்த்த அவரது உறவினர்கள், சின்னதுரை உடல் என்பதை உறுதி செய்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அவர் சாவுக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.