வாலிபரை கடத்தி கொன்று உடல் ஆற்றில் வீச்சு
வாலிபரை கடத்தி கொன்று உடல் ஆற்றில் வீச்சு
தஞ்சையில், வாலிபரை கடத்தி கொன்று உடலை ஆற்றில் வீசிவிட்டு சென்ற கொலையாளிகள் 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பழிக்குப்பழியாக நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வாலிபர் கடத்தல்
தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 30). கூலி தொழிலாளியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று மனோகரனை சிலர் சேவப்பநாயக்கன்வாரி பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த மது அருந்தினர்.
பின்னர் மனோகரனை அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்திச்சென்றுள்ளனர். இது குறித்து மனோகரனின் தாய் வாசுகி தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொன்று உடல் ஆற்றில் வீச்சு
இந்த நிலையில் நேற்று காலை மனோகரன்தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு அருகே கல்லணைக்கால்வாயில் வெட்டிக்காடு பிரிவு பாலம் அருகே ஆற்றுக்குள் பிணமாக கிடந்தார். அவர் உடலில் சரமாரியாக கத்திக்குத்து காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்து உடலை ஆற்றில்வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.
கொலைவழக்காக மாற்றி விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் மனோகரன் கடத்தி செல்லப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த தஞ்சை மேற்கு போலீசார் பின்னர் அதனை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக...
போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
தஞ்சை சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த ஒருவரது நண்பரின் சகோதரனை கொலை செய்த வழக்கில் மனோகரன் மீது வழக்கு உள்ளது. இதன் காரணமாக மனோகரனை சீனிவாசபுரம் செக்கடி தெருவை சேர்ந்த மணி என்கிற இளநீ மணி(37), தஞ்சை சேவப்பநாயக்கன் வாரியை சேர்ந்த கிரண் என்கிற உமா மகேஸ்வரன்(24), தினேஷ்(24) ஆகிய 3 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கொலை செய்து ஆற்றில் உடலை வீசியது தெரிய வந்தது.
3 பேர் கோர்ட்டில் சரண்
இந்த கொலை வழக்கு தொடர்பாக இளநீ மணி, உமா மகேஸ்வரன், தினேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 3 பேரும் நேற்று பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இவர்கள் 3 பேரையும் வருகிற 27-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அப்துல்கனி உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.