விபத்தில் படுகாயம் அடைந்த காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன் கைது


விபத்தில் படுகாயம் அடைந்த காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன் கைது
x

உடையார்பாளையம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலனை ேபாலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

இளம்பெண் சாவு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

நிச்சயதார்த்தம்

விசாரணையில் இறந்து கிடந்தது பெரம்பலூர் மாவட்டம் அல்லி நகரம் கிராமத்தை சேர்ந்த சண்முக சுந்தரம் மகள் அபிநயா (வயது 23) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் சிவன் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணன் மகன் பார்த்திபன் (32) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

அபிநயாவும், நானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்தநிலையில் எனது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். பின்னர் திருமண பத்திரிகையை எடுத்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அபிநயா வீட்டிற்கு சென்று கொடுத்த போது எனக்கும், அபிநயாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

விபத்தில் படுகாயம்

இதில் ஆத்திரம் அடைந்த நான் எனது வீட்டிற்கு திரும்பி சென்று விட்டேன். பிறகு அபிநயா எனக்கு போன் செய்தார். அப்போது நான் உடையார்பாளையம் பஸ்சில் வந்து விடு என்று கூறினேன். அதேபோல் அபிநயா கடந்த 30-ந் தேதி உடையார்பாளையம் வந்து விட்டார். பிறகு நாங்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து விட்டு இரவு அவரது வீட்டிற்கு கொண்டு போய் விடுவதற்காக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொட்டக்கொல்லை அருகே சென்று கொண்டு இருந்தோம்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அபிநயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இதனை கண்டு பீதி அடைந்த நான் அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது

இதையடுத்து, விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் சாலையோரம் வீசிச்சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story