கீழ்வேளூரில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்
கீழ்வேளூரில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூரில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாயில் உடைப்பு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் உள்ள மெயின் சேமிப்பு தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகள் மற்றும் தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகள் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கீழ்வேளூர் பேரூராட்சி சின்ன கடைத்தெரு பஸ் நிறுத்தம் போலீஸ் லைன் செல்லும் வழியில் குடிநீர் வடிகால் வாரிய சேமிப்பு தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 1 மாதமாக தண்ணீர் வீணாகி தெருவில் செல்கிறது.
நடவடிக்கை இல்லை
இதன் அருகில் போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. நெம்மேலி பகுதிக்கு செல்பவர்கள் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
தண்ணீர் வீணாகி தெருவில் செல்வது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.