காலை உணவு திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது


காலை உணவு திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது
x

காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை

காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அண்ணா சிலைக்கு மரியாதை

அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கும், அதன் கீழ் அலங்கரித்து வைத்திருந்த அவரது படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த 102 ஆண்டுகளுக்கு முன்னால், செப்டம்பர் மாதம் 16-ம் நாள் நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவராக இருந்த தியாகராயரால் சென்னை மாநகராட்சியில் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை இயற்றினார். சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இன்றைய விழாவில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது.

பிள்ளைகளுக்கு கல்வியுடன் சேர்த்து உணவும் வழங்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தை முதலில் வெளிப்படுத்தினார், பண்டித அயோத்திதாசர். அவரது சிந்தனையில் இது உதித்தது. கடந்த 1900-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் சென்னை வட்டாரத்தில் உருவாகிய கர்னல் ஆல்காட் பள்ளிகளில் மதிய உணவு வழங்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டார் பண்டிதர் அயோத்திதாசர்.

திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கினார். அந்த ஆயிரம் விளக்கில் இருந்துதான் முதன்முதலாக நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதும் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சி.

காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்.

இந்தியா விடுதலை அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நிதி நெருக்கடியைக் காரணமாக காட்டி ஆங்கிலேயே அரசால் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு 1955-ம் ஆண்டு காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பொதுக்கல்வி இயக்குநராக இருந்தவர் யார் என்று கேட்டீர்கள் என்றால், நெ.து.சுந்தர வடிவேலுதான். அவர்தான் இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டார். சில அதிகாரிகள் கூட எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி அதனை செயல்படுத்திக் காட்டியவர் யார் என்று கேட்டீர்கள் என்றால், பெரியாரின் பெருந்தொண்டராக இருந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு.

இத்தகைய மதிய உணவுத் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நடத்தியது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு. இதனை செழுமைப்படுத்தும் வகையில் கூடுதலாக ஊட்டச்சத்து திட்டத்தை 1971-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி கையில் எடுத்தார். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து வழங்குவதை மாபெரும் இயக்கமாக உருவாக்கி தந்தார்.

அந்தக் காலத்தில் பேபி ரொட்டி என்பதை குழந்தைகள் அனைவருக்கும் வழங்கியது நம்முடைய அரசு. 1975-ம் ஆண்டு முழுமையாக மாநில அரசின் நிதியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் கலைஞர் மாநிலம் முழுவதும் நடத்திக்காட்டினார். இதனை மேலும் விரிவுபடுத்த பெருமுயற்சி எடுத்தார் எம்.ஜி.ஆர். அதிகப்படியான மையங்களை உருவாக்கி, சத்துணவு திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தார்.

சத்துணவில் முட்டை

எம்.ஜி.ஆருக்கு பிறகு 1989-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வருகிறது. அப்போது தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒரு குற்றச்சாட்டை சொன்னார்கள். அது என்னவென்றால், எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் நிறுத்திடுவார், அந்த சத்துணவு திட்டத்தை அழித்திடுவார், ஒழித்து விடுவார் என்று பொய் பிரசாரமே நடந்தது. ஆனால் தலைவர் கருணாநிதி, 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு. வந்த உடனேயே சொன்னார், "சத்துணவுத் திட்டத்தை நான் நிறுத்திடுவேன் என்று சொன்னார்கள். ஆனால், உண்மையான சத்துணவை வழங்கப்போகிறேன் என்று சொல்லி, 1989-ல் முதலில், வாரந்தோறும் ஒரு முட்டை, பின்னர் இரண்டு முட்டையும் வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு வாரத்துக்கு 3 முட்டை வழங்கினார். அத்துடன் கொண்டைக் கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தார். 2010-ம் ஆண்டு வாரம் 5 நாட்களும், சனி, ஞாயிறு தவிர, முட்டை வழங்கினார்..

முட்டை சாப்பிடாதவர்களுக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து, வாழைப்பழமும் வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம்

ஆனால், இதுவரை இருந்தவை அனைத்தும் மதிய உணவுத் திட்டங்கள். ஆனால் காலையிலும் உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை தி.மு.க. அரசு இப்போது தொடங்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story