மண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணமகன் ஓட்டம்


மண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணமகன் ஓட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:45 PM GMT)

இரவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அதிகாலையில் மண்டபத்தில் இருந்து மணமகன் ஓடிவிட்டார். இதனால் திருமண விழாவுக்கு வந்த உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையானார்.

கடலூர்


கடலூர் அருகே உள்ள உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது வாலிபர். கடலூர் கோர்ட்டு ஊழியரான இவருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் சிதம்பரத்தில் நேற்று காலை நடக்க இருந்தது.

இதற்காக இருவீட்டாரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ்களை கொடுத்து திருமண ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். மேலும் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் மண்டபத்தில் திரண்டிருந்தனர். தடல்புடலாக விருந்தும் நடைபெற்றது.

பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்களின் பெற்றோரும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் மண்டபத்திலேயே தங்கியிருந்தனர்.

ஓட்டம் பிடித்த மணமகன்

இதையடுத்து திருமண நாளான நேற்று அதிகாலை உறவினர்கள் எழுந்து பார்த்த போது மணமகனை காணவில்லை. இதனால் பதறிய இருவீட்டாரும் மண்டபம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது விசாரித்ததில், வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அதிகாலையில் மாப்பிள்ளை மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதை கேட்டு மணமகள் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு திரண்டு வந்திருந்த இருவீட்டாரின் உறவினர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மணமகளை கரம்பிடித்த வாலிபர்

இதையடுத்து மணமகளின் பெற்றோர் தங்கள் மகளின் திருமணத்தை குறித்த நேரத்தில் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். அதன்படி திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தங்களது உறவினர்களிடம் பேசினர். அப்போது உறவுக்கார வாலிபர் ஒருவர் மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். அதற்கு மணமகளும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து உறவுக்கார வாலிபர், மணமகளை கரம் பிடித்தார். இதனால் களையிழந்த திருமண மண்டபம் மீண்டும் களைகட்டியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story