பாதுகாப்பில்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் பாலம் கட்டுமானப் பணிகள்


பாதுகாப்பில்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் பாலம் கட்டுமானப் பணிகள்
x

பாதுகாப்பில்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் பாலம் கட்டுமானப் பணிகள்

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் பாலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மாற்றுப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமானப் பணிகள்

உடுமலை-குமரலிங்கம் சாலையிலிருந்து பிரிந்து ஜக்கம்பாளையம், கிளுவங்காட்டூர் வழியாக ஆனைமலை சாலையில் இணையும் இணைப்பு சாலை முக்கிய சாலையாக உள்ளது.இந்தநிலையில் இந்த சாலையின் குறுக்கே கடக்கும் மழைநீர் ஓடையின் மீது தரைமட்டப்பாலம் ஒன்று இருந்தது.தற்போது அந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் முறையான மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது'பாலம் கட்டுமானப் பணிகளால் ஜக்கம்பாளையம், கிளுவங்காட்டூர், மேட்டுக்காடு வழியாக குமரலிங்கம், எலையமுத்தூர், அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் உரல்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.இந்த பாதை குறுகலானதாக இருப்பதால் இரவு நேர பஸ் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களுக்கு சென்று திரும்பும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உழவர் சந்தை

பாலம் கட்டும் இடத்தில் பெயரளவுக்கு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த தற்காலிக பாதை மழைநேரங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது.அதேநேரத்தில் பாலம் கட்டுமானப் பணிகளில் கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பக்கவாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.கீரை கிராமம் என்றழைக்கப்படும் கிளுவங்காட்டூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் அதிக அளவில் கீரைகள், காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அவற்றை உரிய நேரத்தில் சந்தையில் கொண்டு சேர்க்காவிட்டால் பெருமளவு வீணாகி விடும்.குறிப்பாக உழவர் சந்தைக்கு செல்லும் விவசாயிகள் அதிகாலை நேரத்தில் தங்கள் விளைபொருட்களை இந்த வழியாக கொண்டு செல்கின்றனர்.அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்லும் இந்த பாதையில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக இரவு நேரம் மற்றும் மழை நேரங்களில் இந்த பகுதியை கடப்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே பாலத்தை ஒட்டிய மாற்றுப் பாதையை சற்று அகலமாக சீரமைத்து தருவதன் மூலம் இந்த வழியாக பஸ்களை இயக்க முடியும்.விரைவில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கவுள்ள நிலையில் மாணவ, மாணவிகளுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.மேலும் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ரிப்பன் கட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.சிறு அலட்சியமும் உயிரிழப்புகளுக்கு காரணமாகி விடும் அபாயம் உள்ளது'என்று பொதுமக்கள் கூறினர்.



Next Story