தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யும் சகோதரர்கள்
ஊட்டி அருகே ஒரு கிலோ தக்காளியை ரூ.80-க்கு சகோதரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டி அருகே ஒரு கிலோ தக்காளியை ரூ.80-க்கு சகோதரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
சகோதரர்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தா கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் ராமன், புட்டுசாமி. இவர்கள் 2 பேரும் குந்தா பாலம் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். வழக்கமாக மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வந்தனர். இதையடுத்து தக்காளி சாகுபடி செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் ராமன், புட்டுசாமி இருவரும் தக்காளி நாற்றுகளை வாங்கி, ஏற்கனவே தயார் செய்த 50 சென்ட் விளைநிலத்தில் நடவு செய்தனர். தற்போது அந்த செடிகளில் தக்காளி காய்த்து தொங்குகின்றன. இதைத்தொடர்ந்து சகோதரர்கள் தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
தக்காளி சாகுபடி
நீலகிரி உள்பட பல்வேறு இடங்களில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணம் ஆகும். இதற்கிடையே மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் ராமன், புட்டுசாமி கூறியதாவது:-
குந்தா பகுதியில் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு வீட்டு தேவைக்காக ஒருமுறை தக்காளி பயிரிட்டோம். அப்போது நல்ல விளைச்சல் கிடைத்தது. அடுத்து அதிகமாக தக்காளி சாகுபடி செய்தோம். பின்னர் வேர்ப்புழு பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் தக்காளி சாகுபடியை கைவிட்டோம். 15 ஆண்டுக்கு பின்னர் இந்த முறை தக்காளி சாகுபடி செய்யலாம் என முடிவு செய்தோம்.
கிலோ ரூ.80-க்கு விற்பனை
கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 1,000 தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். அப்போது தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. விலை குறைவாக இருக்கிற நேரத்தில் தக்காளி எதுக்கு நடவு செய்கிறீங்க என சிலர் கேள்வி எழுப்பினர். அதை பற்றி யோசிக்காமல் நடவு செய்து பராமரித்தோம். தற்போது தக்காளியை அறுவடை செய்து, உள்ளூர் மக்களுக்கும், சின்ன கடைகளுக்கும் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.