சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!


சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!
x
தினத்தந்தி 8 Aug 2022 11:26 AM GMT (Updated: 8 Aug 2022 12:18 PM GMT)

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

வடசென்னை கிராஸ்ரோடூ சாலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்று அந்த மாணவி பள்ளி செல்வதற்ககாக ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே 25 வயது மதிக்கதக்க இரு நபர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். அந்த நபர்கள், டோல்கேட்டில் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்ததாக கூறப்படுகிறது.

புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது, ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவியை, கைகுட்டை கொண்டு வாயில் வைத்து மூடி, மாணவியை கடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த மாணவி, தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில், ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், மாணவியின் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், கீழே விழுந்து கிடந்த மாணவியை தூக்க முற்பட்ட நேரத்தில், ஆட்டோவில் இருந்த அந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். சென்னையின் பரபரப்பான பகுதியில், பட்டப்பகலில் ஓடும் ஆட்டோவில் இருந்து பள்ளி மாணவி கீழே விழுந்ததால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

உடனடியாக அங்கு கூடிய மக்கள், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த காயமடைந்த மாணவிக்கு முதலுதவி அளிக்கும் வகையில், அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிகிச்சை அளிக்கபட்டதையடுத்து அந்த மாணவியிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரான சார்லசிடமும், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story