கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே வேலை நேரத்தில் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
எருமப்பட்டி
கட்டிட மேஸ்திரி
எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மணிமேகலை (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அசோக்குமார், மணிமேகலை இருவரும் வடவத்தூருக்கு கட்டிட வேலைக்கு சென்றனர். அப்போது அசோக்குமார் காவக்காரம்பட்டிக்கு சென்று மது குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு வந்துள்ளார். இதை அறிந்த மணிமேகலை, வேலை நேரத்தில் மது குடித்துவிட்டு வரலாமா என அவர் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
தற்கொலை
இதையடுத்து அசோக்குமார் சிறிது நேரம் ஓய்வெடுத்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் அசோக்குமார் வராததால் மணிமேகலை கவலையாக காணப்பட்டார். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள செங்குட்டை என்ற இடத்தில் மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த மணிமேகலை, அசோக்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.