கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலகவுண்டம்பட்டி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

கட்டிட மேஸ்திரி

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி, உப்புலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 78). இவருக்கு துளசிமணி என்ற ஒரு மகளும், கார்த்திக் (24) என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திக் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சரண்யா (20) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தந்தை கோவிந்தன் வீட்டுக்கு அருகே தனியாக வசித்து வந்தனர்.

கார்த்திக் அடிக்கடி மது அருந்தி வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கார்த்திக் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த ஒருவர் கோவிந்தனுக்கு போன் செய்து உங்களது மகன் கார்த்திக் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் பகுதியில் ஓடையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது தனது மகன் இறந்த நிலையில் இருந்தததை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அவர் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story