கட்டிட மேஸ்திரி கட்டையால் அடித்து கொலை
வேலூர் தொரப்பாடியில் கட்டிட மேஸ்திரியை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பேனர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட மேஸ்திரி
வேலூரை அடுத்த சித்தேரி கழனிக்காட்டு தெருவை சேர்ந்த மோகன் மகன் பிரகாஷ் (வயது 26), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து சித்தேரி நோக்கி சென்றுள்ளார். தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியின் அருகே சித்தேரி சாலையில் பிரகாஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லூரியின் எதிரே பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வரும் சித்தேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் அந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். பிரகாஷ் வேகமாக மோட்டார் சைக்கிளை ஒட்டி ராமகிருஷ்ணன் மீது மோதுவது போன்று சென்றதாக கூறப்படுகிறது. அதனால் ஆவேசமடைந்த ராமகிருஷ்ணன் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பிரகாஷிடம், எதற்காக என் மீது மோதுவது போன்று வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தாய் என்று கேட்டுள்ளார்.
கட்டையால் அடித்து கொலை
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் கடையின் அருகே கிடந்த கட்டையை எடுத்து பிரகாஷின் தலையில் சரமாரியாக அடித்து உள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து ராமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தகவலறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பேனர் கடை உரிமையாளர் கைது
இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்ற ராமகிருஷ்ணனை (48) மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் மற்றும் ஊர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரகாஷ் மற்றும் ராமகிருஷ்ணனுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன் ஆத்திரத்தில் பிரகாஷை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். போலீசுக்கு பயந்து ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வேப்பங்குப்பத்துக்கு தப்பிச்செல்ல முயன்றபோது அவரின் செல்போன் எண்ணை வைத்து பின்தொடர்ந்து மடக்கி பிடித்து கைது செய்தோம் என்றனர்.