அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வந்த வடமாநில பெண் துறவியின் கார் உடைப்பு


அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வந்த வடமாநில பெண் துறவியின் கார் உடைப்பு
x
தினத்தந்தி 10 March 2024 12:18 AM GMT (Updated: 10 March 2024 12:38 AM GMT)

துறவியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரில் கட்டப்பட்டிருந்த ராமர் கொடியை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பரமக்குடி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ஷிப்ரா பதக்(வயது 38) என்ற பெண் துறவி, தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் ராமேசுவரத்திற்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரி என்பதால் பரமக்குடியில் உள்ள சிவன் கோவில்களில் இவர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் பரமக்குடியில் தங்கிவிட்டு, நேற்று காலை 6 மணியளவில் அங்கிருந்து சத்திரக்குடி வழியாக ராமேசுவரம் நோக்கி ஷிப்ரா பதக் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய தந்தை மற்றும் சகோதரர் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்த 6 பேர், திடீரென அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். மேலும் அந்த நபர்கள் ராமர் குறித்து சர்ச்சையாக பேசியும், 'கோ பேக் ராமர்' என்றும் கோஷமிட்டு, துறவியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரில் கட்டப்பட்டிருந்த ராமர் கொடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பெண் துறவி ஷிப்ரா பதக்கின், கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஷிப்ரா பதக், பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story