கார் டிரைவரின் அண்ணன் தனபால் ஆஸ்பத்திரியில் அனுமதி


கார் டிரைவரின் அண்ணன் தனபால் ஆஸ்பத்திரியில் அனுமதி
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள கார் டிரைவரின் அண்ணன் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள கார் டிரைவரின் அண்ணன் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனபால்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரை சேர்ந்தவர் தனபால் (வயது 46). இவருடைய தம்பி கனகராஜ். கார் டிரைவரான இவர் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசார் தேடி வந்தநிலையில், ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பின்னர் கோடநாடு வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக தனபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே நில மோசடி புகாரில் தனபால் மீது மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்தபோது தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அதன்பிறகு ஜாமீனில் வீடு திரும்பினார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் தனபால் நேரில் ஆஜராகி 8 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை எடப்பாடி அருகே உள்ள வீட்டில் தனபால் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் தனபால் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story