கொடைக்கானல் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்


கொடைக்கானல் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
x

கொடைக்கானல் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்ததில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல்:

வேலூர் பாரதிநகரை சேர்ந்தவர் நூர்முகம்மது (வயது 43). நேற்று முன்தினம் இவர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து விட்டு, மீண்டும் வேலூர் நோக்கி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை, வேலூரை சேர்ந்த முனியன் (39) ஓட்டினார்.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. செண்பகனூர் அருகே கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் தடுப்புச்சுவரை இடித்து கொண்டு 50 அடி பள்ளத்துக்குள் கார் பாய்ந்தது. இதில் நூர்முகமது, முனியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நூர்முகமதுவின் மனைவி, 2 குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


1 More update

Next Story