காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது


காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது
x

அணைக்கட்டு மலைப்பகுதிகளில் பெய்த பலத்தை மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 12 மலை கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்

பலத்த மழை

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 80-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பீஞ்சமந்தை ஊராட்சியில் இருந்து பாலாம்பட்டு ஊராட்சிக்கு செல்லும் சாலையின் குறுக்கே தொங்குமலை பகுதியில் ஆறு செல்கிறது.

இந்த ஆற்றை கடந்துதான் தொங்குமலை, பாலாம்பட்டு, நெக்னி, தானிமரத்தூர், அரசமரத்தூர், தேக்குமரத்தூர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கின்றனர். மலைகளில் இருந்து மழைநீர் சிறு ஓடைகள் மூலம் ஆறாக உருவெடுத்து அமிர்தி வழியாக சென்று நாகநதி ஆற்றில் கலக்கிறது.

காட்டாற்று வெள்ளம்

இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் பொதுமக்கள் ஆற்றைக்கடந்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, தொங்குமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொங்கு மலையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.

இதனால் நேற்று முதல் 12 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, கடும் அவதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் அந்தப் பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உயரத்தை அதிகரிக்க வேண்டும்

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:- தரைப்பாலத்தின் 2 பக்கமும் தடுப்புச்சுவர்கள் இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. குழந்தைகளுடன் அந்த வழியாக செல்லும் போது மிகவும் அச்சத்துடன் பாலத்தை கடக்கிறோம். இரவு நேரத்தில் அந்த வழியாக பயணிக்கும்போது, தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

மழைக்காலத்தில் சுமார் 6 மாதம் தரைப்பாலத்தை மழைநீர் மூழ்கடித்துவிடும். அப்போது எங்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கும். தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் ஆற்றில் மழை நீர்செல்கிறது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. எனவே தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரிப்பதோடு, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் அமைத்து மலைவாழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story