ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலையை காணவில்லை


ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலையை காணவில்லை
x

அனிச்சம்பாளையம் கணபதி நகரில் ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலையை காணவில்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை அடுத்த அனிச்சம்பாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சங்கர் என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் கணபதி நகர் பகுதியில் கடந்த 2020-21-ம் ஆண்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை சிமெண்டு சாலை அமைக்கப்படவில்லை. இதுபற்றி கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த சம்பந்தப்பட்ட அலுவலரிடம், எங்கள் நகருக்கு சிமெண்டு சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி சாலை அமைத்ததுபோல் பொதுமக்களை ஏமாற்றி அரசு நிதியை முறைகேடு செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் அரசு பணியில் உள்ளேன், இதைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்கக்கூடாது, மீறி ஏதேனும் கேட்டால் என்னை அரசு பணியை செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதாக அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி வருகிறார். எனவே காணாமல்போன அனிச்சம்பாளையம் கணபதி நகரில் உள்ள சிமெண்டு சாலையை கண்டுபிடித்து தருமாறும், சிமெண்டு சாலை அமைக்காமலேயே அமைத்ததுபோல் அரசு நிதியை முறைகேடு செய்த அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.


Next Story