தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது - எல்.முருகன்


தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது  - எல்.முருகன்
x

தமிழகம் முழுவதும் பா.ஜ.க வளர்ச்சி பெற்று வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ஊட்டிக்கு வந்துள்ளார்.

நீலகிரியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அரசுக்கு சிக்கல் வரும் போது திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல என்று சொல்வது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழக்கமாகவும், கோட்பாடாகவும் மாறிவிட்டது. திமுக கட்சியினர், அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மக்கள் திமுகவை வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ராஜாவை எம்.பி.யாக தேர்வு செய்ததற்கு நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் வருத்தம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இது தமிழகம் முழுவதும் பரவி, திமுகவுக்கு கெட்ட பெயரையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வந்து வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.கொங்கு மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பா.ஜ.க வளர்ச்சி பெற்று வருகிறது. மத்திய அரசு, தமிழகத்திற்கு போதிய நிதியை வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசிடம் இருந்து நிதி வராததால், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.


Next Story