விராலிமலை முருகன் கோவிலில் தேர் புதுப்பிக்கும் பணி மும்முரம்
விராலிமலை முருகன் கோவிலில் தேர் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விராலிமலை முருகன் கோவில்
விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும், வைகாசி மற்றும் தை மாதங்களில் தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெறும்.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு ஆண்டுக்கு 2 முறை தேரோட்டம் நடைபெறுவது சிறப்பாகும்.
தேர் சக்கரம் சேதம்
இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த தேர் சிதிலமடைந்து ஓடாமல் இருந்தது. இதையடுத்து முருகன் திருக்கோவில் சார்பில் புதிய தேர் செய்யும் பணியானது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு மேல் நடைபெற்ற தேர் திருப்பணியானது நிறைவடைந்து கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெற்று வந்தது. இடையில் கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து கடந்த முறை நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சக்கரம் மற்றும் தேரில் உள்ள சில பாகங்கள் சேதமடைந்து இருப்பதாக பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
புதுப்பிக்கும் பணி மும்முரம்
இதனைதொடர்ந்து தேரை ஆய்வு செய்த கோவில் நிர்வாகத்தினர் பழுதடைந்த சட்டங்கள், சிலைகளை அகற்றி புதிய தீர்த்த மரங்களைக்கொண்டு தேரை புதுப்பிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்துசமய அறநிலையத்துறை மூலமாக துறையூரை சேர்ந்த ஸ்தபதி சுரேஷ் தலைமையில் தேரை பிரித்து புதுப்பிக்கும் பணியை தொடங்கினர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் பணியானது தற்போது 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் விரைவில் இப்பணி முடிந்து வரும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.