இறுதிநாளில் களைகட்டிய சென்னை உணவுத் திருவிழா


இறுதிநாளில் களைகட்டிய சென்னை உணவுத் திருவிழா
x

உணவுத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததோடு, பலவித உணவு வகைகளையும் பொதுமக்கள் ருசித்து மகிழ்ந்தனர்.

சென்னை,

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த 3 நாள் உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 வகையான தோசைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், மசாலாக்கள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், சிறப்பு வாய்ந்த நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன. மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்வதற்காக அரங்குகளும் இடம்பெற்றன.

உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்கட்டன. மேலும் பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் ஆகியவை நடைபெற்றன.

உணவுத் திருவிழாவின் 2-வது நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வகைகள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை படைத்தனர்.

இந்த நிலையில் உணவுத் திருவிழாவின் இறுதி நாளான இன்று மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. இன்று விடுமுறை நாள் என்பதால், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். அங்கு நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததோடு, பலவித உணவு வகைகளையும் ருசித்து மகிழ்ந்தனர். இந்த உணவுத் திருவிழா, பொதுமக்களுக்கு சுவையான உணவை வழங்கியதோடு, பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story