கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:30 AM IST (Updated: 16 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.

கோயம்புத்தூர்
கோவை


கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.


சுதந்திர தின விழா


நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


இதையடுத்து அவர், கோவையில் சிறப்பாக பணிபுரிந்த போலீ சார் 109 பேர், அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 153 பேர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழி போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


கலை நிகழ்ச்சிகள்


விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அரசூர் அரசு பள்ளி மாணவிகளின் கும்மியாட்டம், ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நாட்டுப்புற நடனங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.


மேலும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் ஜிம்னாஸ்டிக் சாகசம், ராணுவ வீரர்கள் சார்பில் களரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


விழாவில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், வருவாய் அதிகாரி ஷர்மிளா, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சண்முகம் (தெற்கு), சந்தீஷ் (வடக்கு), மதிவாணன் (போக்குவரத்து), சுஹாசினி (தலைமையிடம்), பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மாநகராட்சி


கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசிய கொடி ஏற்றினார். இதில் ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


விழாவில், மாநகராட்சியில் 25 ஆண்டு பணி புரிந்த 4 பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மாநகராட்சி ஊழியர்கள் 76 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் வழங்கினார். இதில் துணை மேயர் வெற்றி செல்வன், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பாரதியார், வேளாண் பல்கலைக்கழகம்


கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் தேசிய கொடியை துணை வேந்தர் கீதா லெட்சுமி ஏற்றினார். அதைத்தொடர்ந்து தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய பயிர் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்து துணை வேந்தர் கீதா லெட்சுமி பேசினார். மேலும் அவர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.


கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பதிவாளர் முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் 77 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நாட்டு நலப்பணித்திட்ட இயக்குனர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story