கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் பிரபுசங்கர் ஏற்றி மரியாதை செலுத்தினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

குடியரசு தின விழா

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை தேசிய கொடியை கலெக்டர் பிரபுசங்கர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு திறந்த ஜீப்பில் நின்றபடி பார்வையிட்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும் அவர் பறக்கவிட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு துறைகளின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 77 காவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் 330 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் காவல்துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையிருக்கு பதக்கங்களும் வழங்கினார்.

கண்கவர் கலைநிகழ்ச்சி

அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் மரம் வளர்ப்போம் மனிநேயம் காப்போம் என்ற விழிப்புணர்வு நாடகம், தற்காப்புக்கலை, தமிழ் பாரம்பரியகலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரூர் துப்பறியும் பிரிவு மோப்பநாய் படைப்பிரிவு வரவேற்பு மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் குழந்தை திருமணத்தை தடுப்போம், சமூகத்தை பாதுகாப்போம், பரதநாட்டியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் கண்கவர் கலைநிகழ்ச்சிகைளை நடத்தி அசத்தினர். பின்னர் கலைநிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு பரிசினையும் கலெக்டர் வழங்கினார்.

கலந்து ெகாண்டவா்கள்

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குனர் சீனிவாசன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், வட்டாட்சியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story