விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த மயிலாடுதுறை கலெக்டர்...!


விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த மயிலாடுதுறை கலெக்டர்...!
x

மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் அம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 25). இவரும் இவரது மனைவி சுபஸ்ரீ (23). இவர்களது 10 மாத குழந்தை சர்வேஷ் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை வந்துள்ளனர்.

வழியில் வழுவூர்- பண்டாரவடை கிராமத்தில் மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து நிலை தடுமாறியதில் 3 பேரும் கீழே விழுந்துள்ளனர். இதில் சுபஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . குழந்தையும் காயமடைந்தது.

இதனால் செய்வது அறியாது வினோத்குமார் திகைத்து நின்ற நிலையில் அவ்வழியே சென்ற மயிலாடுதுறை கலெக்டர் லலிதா விபத்தை பார்த்துவிட்டு உடனடியாக காயமடைந்த சுபஸ்ரீ, குழந்தை சர்வேஷ் மற்றும் வினோத் குமார் ஆகிய 3 பேரையும் தனது காரில் அழைத்து சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

தொடர்ந்து கலெக்டர் லலிதா டாக்டர்களை அழைத்து காயம் அடைந்த சுபஸ்ரீ அவரது குழந்தை சர்வேஷ் ஆகியோருக்கு சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சுபஸ்ரீ மற்றும் அவரது குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மயிலாடுதுறை கலெக்டரின் இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.


Next Story