திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து 336 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் நிலம் சம்பந்தமாக 99 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 86 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 20 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 55 மனுக்களும், இதர துறைகள் சம்பந்தமாக 76 மனுக்களும் என மொத்தம் 336 மனுக்கள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மேசை பந்து பயிற்சி அளிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாற்றுத்திறனாளி பயிற்சியாளருக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 200 வீதம் ரூ.18 ஆயிரத்து 600 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.6 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலான இலவச சலவை பெட்டியையும் என மொத்தம் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருவள்ளூர் வட்டம் பாக்கம் கிராமத்தில் தலா ரூ.2 லட்சத்து 89 ஆயிரம் வீதம் ரூ.57.80 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story