தூத்தூர் ஊராட்சியில் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர் - சுத்தமான குடிநீர் கேட்ட பெண்களால் பரபரப்பு


தூத்தூர் ஊராட்சியில் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர் - சுத்தமான குடிநீர் கேட்ட பெண்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 4 Jun 2023 1:52 AM GMT)

தூத்தூர் ஊராட்சியில் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைக்க வந்த கலெக்டரிடம் சுத்தமான குடிநீர் கேட்ட மீனவ பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

தூத்தூர் ஊராட்சியில் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைக்க வந்த கலெக்டரிடம் சுத்தமான குடிநீர் கேட்ட மீனவ பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மஞ்சப்பை திட்டம்

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராமத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைக்க வந்திருந்தார்.

மீனவ பெண்கள் முற்றுகை

அப்போது அங்கு குவிந்த மீனவ பெண்கள் மாவட்ட கலெக்டர் வழங்கிய மஞ்சப்பையை வாங்கியபின் தங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை என்றும், அதனை வழங்கக்கேட்டு பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருவதாகவும், யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டி கலெக்டர் ஸ்ரீதரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து 15 நாட்களுக்குள் சுத்தமான குடிநீர் வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து ஆனி, ஆடி மாதங்களில் கடற்சீற்றம் ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்றும், இரையுமன்துறை முதல் இரவிபுத்தன்துறை வரை உள்ள கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவுகள் இல்லாத இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைத்து மீனவ கிராமங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

நடவடிக்கை

அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிவிட்டு சமத்துவபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பேரிடர் மீட்பு மையத்தை பார்வையிட்டார். அங்கு சேதமடைந்து இருக்கும் பகுதிகளை உடனடியாக சீரமைத்து நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பணமுகம் பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் கடந்தாண்டு ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்பால் சேதமடைந்த மங்காடு பாலத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்கும் விதமாக தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையையும் ஆய்வு செய்தார்.

உடன் கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி மற்றும் வருவாய் துறையினர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.


Next Story