வாரச்சந்தையை மூடுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை


வாரச்சந்தையை மூடுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் வாரச்சந்தைக்கு மாற்று இடம் ஒதுக்கி தராமல் வாரச்சந்தையை மூடுவதை கண்டித்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வாரச்சந்தைக்கு மாற்று இடம் ஒதுக்கி தராமல் வாரச்சந்தையை மூடுவதை கண்டித்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகை

ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் நவீன பஸ்நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட உள்ளது. இதன்காரணமாக அதில் உள்ள கடைகள் மற்றும் வாரச்சந்தை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாரச்சந்தையில் கருவாடு, காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கடந்த புதன்கிழமை வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கடந்த வாரம் மட்டும் கடைகளை அமைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று ஏராளமான வாரச்சந்தை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் இவர்கள் தலைவர் முத்துவிஜயன் தலைமையில் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையை மாற்று இடம் ஒதுக்கி தராமல் வாரச்சந்தை வியாபாரிகளை நகராட்சி நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது.

இடம் ஒதுக்கி தர வேண்டும்

மேலும், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு ராமநாதபுரம் நகர் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் புறநகர் பகுதியில் 20 சென்ட் இடம் ஒதுக்கி தருவதாகவும், அதில் 600 வியாபாரிகளும் கடை போட்டு கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் 20 சென்ட் இடத்தில் 600 வியாபாரிகள் கடை போட முடியாது என்றும், அது மிகுந்த தொலை தூரமாக இருப்பதால் பொதுமக்கள் வாரச்சந்தைக்கு வர மாட்டார்கள் என்பதால் நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு வாரச்சந்தையானது நகரை ஒட்டிய பகுதியில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் போடும் வகையில் இடம் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு கூறினர். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


Next Story