நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர்
கோவை டவுன்ஹாலில் உள்ள நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர், மாநகர பகுதியில் உள்ள கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
கோவை
கோவை டவுன்ஹாலில் உள்ள நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர், மாநகர பகுதியில் உள்ள கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மூதாட்டியிடம் நலம் விசாரிப்பு
கோவை மாநகராட்சி ஆணையாளராக உள்ள மு.பிரதாப் நேற்று திடீரென்று மாநகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவர் டவுன்ஹால் பகுதியில் ஆய்வு செய்தபோது,
அங்குள்ள நடைபாதையில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் இருந்தார். அந்த மூதாட்டியை பார்த்ததும் அவரிடம் சென்ற ஆணையாளர், நலம் விசாரித்தார்.
பின்னர் அவரிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன், அங்கு செல்ல உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்று கேட்டறிந்தார். அதற்கு அந்த மூதாட்டி, தனக்கு விருப்பம் இல்லை என்றும்,
தனது மகன் இரவில் இங்கு வந்து அழைத்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து சென்ற ஆணையாளர் அங்குள்ள கடைகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடைகளில் ஆய்வு
டவுன்ஹால், ராஜவீதி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். அத்துடன் கடைகளில் இருந்த விற்பனையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரகேடு ஏற்படுவதை தடுக்கத்ததான் முதல்-அமைச்சர் மஞ்சள் பை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
எனவே பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட பையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு மஞ்சள் பைகளை பயன்படுத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
தொடர்ந்து அங்கிருந்து மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 11-வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற அவர், அங்குள்ள வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்ததுடன், தூய்மை பணியாளர்கள் ஒழுங்காக பணிக்கு வருகிறார்களா? சரியாக குப்பைகள் சுத்தம் செய்யப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.