மாவட்டத்தில் 6 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


மாவட்டத்தில் 6 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x

மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் 6 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட 1589 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வுக்கு காரணமான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், வேலையின்றி வாடும் இளைஞர்களக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நாடுதழுவிய அளவில் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் லாசர், மாவட்ட செயலாளர் கவிவர்மன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அன்புமணவாளன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 93 பெண்கள் உள்பட 234 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 200 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை, ரூ.600 கூலி வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆலங்குடி

ஆலங்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சந்தைபேட்டையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலங்குடி தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். திருவரங்குளம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் வடிவேல், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 116 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்படத்தில் தங்க வைத்தனர். மேலும் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சின்னத்துரை எம்.எல்.ஏ. கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மத்திய அரசை கண்டித்து சின்னத்துரை எம்.எல்.ஏ. தலைமையில் கந்தர்வகோட்டை வெள்ளை முனியர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்தனர். பின்னர் அங்கு அவர்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்ைககளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட 500 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 117 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பொன்னமராவதி காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக பொன்னமராவதி பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

இலுப்பூர்

இதேேபால் இலுப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான மொத்தம் 1,589 பேரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.


Next Story