பஸ்சில் இருந்து முதியவரை தள்ளிவிட்ட கண்டக்டர்
கடலூரில் பஸ்சில் இருந்து முதியவரை கண்டக்டர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை நல்லாத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். கண்டக்டராக புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்த தரணிபதி (வயது 52) என்பவர் பணியில் இருந்தார். பஸ் புறப்பட்டதும் அவர் பயணிகளிடம் டிக்கெட் கொடுக்க தொடங்கினார்.
அப்போது அவர், அண்ணா பாலத்தை கடந்து பாரதி சாலையில் சென்ற போது பஸ்சில் இருந்த கடலூர் திருமாணிக்குழி அடுத்த டி.புதுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தியிடம் (60) டிக்கெட் எடுக்கும்படி கூறினார்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதையடுத்து தரணிபதி, சுந்தரமூர்த்தியை பஸ்சில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கண்டக்டர் தரணிபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரை பஸ்சில் இருந்து கண்டக்டர் தள்ளிவிட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.