குறை தீர்க்கும் கூட்டத்துக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த காங்கிரசார்


குறை தீர்க்கும் கூட்டத்துக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த காங்கிரசார்
x

நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு காங்கிரசார் பிளாஸ்டிக் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்து, குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக்கோரி மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி துணை ஆணையர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சி நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் பகுதி மக்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மாலையாக கட்டி அணிந்து கொண்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

பாளையங்கோட்டை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகர், ஏ.ஆர்.லைன் தெற்கு பகுதி, இசக்கி அம்மன் கோவில் வடக்கு பகுதி மற்றும் அப்பாசாமி தோட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி குடிநீர் பல வாரங்களாக கிடைக்கவில்லை. சில நாட்கள் சிறிது நேரம் மட்டும் தண்ணீர் வந்து உடனடியாக நின்று விடுகிறது.

இங்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், பணிபுரியும் அரசு ஊழியர்கள் பலர் குடியிருந்து வருகிறார்கள். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறார்கள். எனவே இந்த பகுதிக்கு தினமும் மாநகராட்சி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர செயின்ட் பால்ஸ் நகர் மக்கள் நல அபிவிருத்தி சங்க தலைவர் சாம் சுந்தர்ராஜா தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு ரோடு 15 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் மோசமாக இருந்து வந்தது. தற்போது புதிதாக தார் சாலை அமைத்து கொடுத்த மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த சாலை உயரமாக இருப்பதால் சாலையின் இருபுறமும் செம்மண் நிரப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

பழைய பேட்டை பகுதி பெண்கள் கொடுத்த மனுவில், "நெல்லை மாநகராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு வேலைகளை செய்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. விரைவாக சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர். இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.


Next Story