பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 5:15 AM IST (Updated: 5 July 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி

பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 14,000 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 300 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் மின் உற்பத்தி, மின் பாதை அமைத்தல், பராமரித்தல் மற்றும் விநியோக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களை, நிரந்தரபடுத்த பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பொது துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 300 பேர் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

கோஷங்கள் எழுப்பினர்

அவர்கள் கொடுத்த மனுவில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் சென்னை வெள்ளம், வர்தா, தானே, ஒக்கி போன்ற புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்பட்ட மின் தடைகளை சரி செய்து மின்வாரியத்திற்கும் தமிழக அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யப்படாததால் எந்தவித சலுகையும் கிடைக்கவில்லை. எனவே இந்த பிரச்சனையை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று எங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இருந்தது. கலெக்டர் நேற்று அலுவலகத்தில் இல்லாததால், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். இதற்கு மின்வாரிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரபடுத்த வேண்டும். தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அவுட்சோர்சிங் முறைக்கு செல்லக்கூடாது. ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், என்றனர். இதில் சி.ஐ.டி.யு. தலைவர் சந்திரலிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன், நிர்வாகிகள் அபூபக்கர், ஜெயகணேஷ், தேவராஜ், ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story