கொட்டகை அமைத்து தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் வந்து தம்பதி மனு


கொட்டகை அமைத்து தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் வந்து தம்பதி மனு
x
தினத்தந்தி 25 April 2023 2:30 AM IST (Updated: 25 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொட்டகை அமைத்து தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் வந்து தம்பதி மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

கொட்டகை அமைத்து தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் வந்து தம்பதி மனு கொடுத்தனர்.

ஆடுகளுடன் வந்த தம்பதி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்தனர். அப்போது 6 ஆடுகளுடன் ஒரு தம்பதி வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி தர்ணாவை கைவிட வைத்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த மரியபாஸ்கர் (வயது 49), அவருடைய மனைவி நம்பிக்கைராணி என்பதும், ஆடுகளுக்கு கொட்டகை அமைத்து தரக்கோரி மனு கொடுக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து மரியபாஸ்கர் கூறுகையில், கொரோனா காலத்துக்கு முன்பு வரை நான் ஆட்டோ ஓட்டி வந்தேன். கொரோனா காலத்தில் ஆட்டோ ஓட்ட முடியாததால், வருமானத்தை இழந்தேன்.

கொட்டகை அமைத்து தரக்கோரி...

மேலும் விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கடினமான வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஆடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறேன். இதற்கிடையே ஆடுகளின் பாதுகாப்புக்காக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கொட்டகை அமைத்து தரக்கோரி பலமுறை மனு கொடுத்தேன். இதுவரை எனக்கு கொட்டகை அமைத்து தரவில்லை.

இதனால் எனது ஆடுகளுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கொட்டகை அமைத்து தரக்கோரி ஆடுகளுடன் வந்து மனு கொடுத்ததாக கூறினார். கலெக்டர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் தம்பதி மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story